திருப்பூர்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் கொங்கு மண்டல பயிலரங்கம், காங்கேயம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களை அடக்கிய நிர்வாகிகளுக்காக நடைபெற்ற இந்த பயிலரங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக திமுகவின் செய்தி தொடர்பு குழு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பயிலரங்க நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீன், தமிழ்நாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து திமுகவோடு கூட்டணியில் தொடர்வதாகவும், திமுகவிற்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்குமான உறவு என்பது கொள்கை ரீதியானது என தெரிவித்தார்.
இந்த உறவு அண்ணா காலத்தில் இருந்து தற்போது வரை தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது சிறுபான்மையினரின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை இதயப்பூர்வமாக கேட்கக்கூடிய கட்சி திமுக எனவும் தெரிவித்தார். மேலும், “பாஜக, அயோத்தியில் ராமர் கோயில் கட்டி, அதனை சர்வதேச அளவில் அரசியல் செய்ய விரும்புகிறது. ஆனால் அவர்களின் எண்ணம் பலிக்காது என்பதை நாட்டு நடப்புகள் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.
1989ஆம் ஆண்டு மும்பை மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உடன்படிக்கை செய்த பாம்பே டிக்ளரேஷன் உடன்படிக்கையை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில், பாஜக கட்சியோடு எப்போதும் உடன்படுவதில்லை என்ற கொள்கையை தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம்.
பாபர் மசூதி சம்பவம் மட்டுமல்லாது, தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், நாட்டின் அரசியலமைப்பை பாழ்படுத்திக் கொண்டிருக்கிற பாஜகவோடு கூட்டணி வைப்பதில்லை என்று 1989ஆம் ஆண்டின் முடிவை இப்போதும் தொடர்வதாக” தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மட்டுமல்லாது. 25 கோடி இஸ்லாமிய மக்களும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என்பது எதார்த்தமான உண்மை எனக் கூறிய அவர், இந்தியா கூட்டணி 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் தமிழ்நாடு: திருப்பூரில் களைகட்டும் பித்தளை பானைகள் தயாரிப்பு..