கரோனா பரவலைத் தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் நிர்வாகம் சார்பில் சந்தைகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் செல்லும் பொதுமக்களுக்கு ஆங்காங்கே கைக் கழுவுவதற்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இதற்கும் ஒரு படி மேல் சென்று, இந்தியாவிலேயை முதன்முறையாக தென்னம்பாளையம் உழவர் சந்தையில் கிருமிநாசினி சுரங்கப்பாதையை மாவட்ட நிர்வாகம், தனியார் நிறுவனத்துடன் இணைந்து அமைத்துள்ளது. சந்தைக்கு வரும் பொதுமக்கள் இந்தச் சுரங்கப்பாதை வழியே செல்லும்போது கிருமிநாசினி பொதுமக்களின் உடல் முழுவதும் ஸ்பிரே செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுரங்கப்பாதையை உருவாக்கிய வெங்கடேஷ் கூறுகையில், " கரோனா வைரஸ் தொற்று அழிப்பதற்கான வழியாக இது அமையும். கடந்த வாரம் சந்தைகளில் அதிக கூட்டம் இருப்பதை கண்டு துருக்கி நாட்டில் இருப்பதைப் போன்று, இங்கு வடிவமைக்க வேண்டும் என முடிவு எடுத்தோம். இரண்டு நாள் தொடர் முயற்சியில் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு இதனை உருவாக்கியுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: 17 ஆயிரம் பணம் பறித்த அதிமுக நிர்வாகி - தகராறில் காவல் துறை வாகன கண்ணாடி உடைப்பு!