சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் அனுமதியின்றி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து திருப்பூரில் அறிவொளி சாலை பகுதியில் சிஏஏவுக்கு எதிரான கூட்டமைப்பினர் திரண்டு தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து 20ஆவது நாளாக நடைபெற்றுவரும் இந்த தர்ணா போராட்டம் மக்களின் ஆதரவுடன் நடைபெற்றுவருகிறது. திருப்பூரில் இஸ்லாமிய அமைப்புகள் கடந்த 15ஆம் தேதி முதல் நடத்தும் இப்போராட்டத்தை தடுக்கக்கோரி வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
போராட்டம் காரணமாக பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை காவல் துறை ஏன் இதுவரை அப்புறப்படுத்தவில்லை என்று கேள்வியெழுப்பியதாகவும், அனுமதியின்றி போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து திருப்பூர் அறிவொளி சாலை பகுதியில் நடந்துவரும் தொடர் தர்ணா கூட்டத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கூடத் தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதுகுறித்து திருப்பூர் போராட்டக் குழுவினர் கூறுகையில், "பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் 20 நாள்களாகப் போராடி வருகிறோம். ஆனால், உயர் நீதிமன்றம் எங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எங்களைக் கைது செய்வதென்றால் கைது செய்யுங்கள் நாங்கள் தயார்?” என்றனர்.
இதையும் படிங்க: நெய்வேலியில் விஜய் செய்த தரமான சம்பவம் - வெளியானது புகைப்படம்