திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள குமாரசாமிக்கோட்டை, மாம்பாடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து புங்கந்துறை, சங்கரண்டாம்பாளையம், ஊதியூர், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல பொதுமக்கள் அமராவதி ஆற்றைக் கடக்க ஆற்றில் இறங்கி மணலில் வாகனத்துடன் ஆபத்தான பயணத்தை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொண்டுவருகின்றனர்.

அமராவதி ஆற்றில் தண்ணீர் செல்லும் காலங்களில் மக்கள் ஆற்றின் மறுகரைக்குச் செல்ல 15 கிலோமீட்டர் சுற்றி அக்கரைபாளையம் அல்லது பெரமியம் வழியாகச் செல்லவேண்டிய நிலை உள்ளது. அதே நேரத்தில் ஆற்றில் தண்ணீர் வராத காலங்களில், இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் செல்லும் பலரும், ஆற்றில் வாகனத்தை இறக்கி மணலில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுவருகின்றனர்.

இப்பகுதியில் பாலம் கட்டித்தர வேண்டும் என 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்துவரும் நிலையில், இதுவரை பாலம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
