தமிழ்நாடு சட்டபேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருப்பூர் தெற்கு தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட திருப்பூர் முன்னாள் மேயர் விசாலாட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து தாராபுரம் சாலையில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு கட்சித் தொண்டர்கள் ஆதரவுடன் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு அவர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.
அப்போது, தங்களையும் உள்ளே விட வேண்டும் அக்கட்சித் தொண்டர்கள் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே முன்னாள் அதிமுக சட்டபேரவை உறுப்பினர் குணசேகரன் தனது கட்சி ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
அதிமுக - அமமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து விசாலாட்சி தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். அவர் வேட்புமனு தாக்கல் செய்து முடிப்பதற்கு முன்பாகவே குணசேகரன் வேட்புமனு தாக்கல் செய்யும் அறைக்கு வந்தார். அதன் பின்னர் விசாலாட்சி வேட்புமனு தாக்கல் செய்யும்வரை காத்திருந்து, தனது வேட்பு மனுவினை தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் குணசேகரன் வழங்கினார்.
தனது வேட்பு மனுவை முதலாவதாக தாக்கல் செய்ய தேவையான ஏற்பாடுகளை குணசேகரன் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘இந்தியாவையே பிச்சைக்கார நாடாக மாற்றிய பாஜக’ - சீமான் கொந்தளிப்பு