திருப்பூர்: பனியன் கம்பெனி தையல் தொழிலாளி எழுதிய "சின்னானும் ஒரு குருக்கள் தான்" நாவலுக்கு அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
திருப்பூர் கோயில் வழியை சேர்ந்தவர் சிவராஜ் (50). தையல் தொழிலாலி, இவரது மனைவி தேவி. இவரும் பனியன் நிறுவனத்தில் தையல் வேலை செய்து வருகிறார்.
இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சிறுவயது முதலே கதை எழுதும் பழக்கம் உடையவர் சிவராஜ். இவர் எழுதிய 'சின்னானும் ஒரு குருக்கள் தான்' என்ற நாவலுக்கு தான் தற்போது அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் விருது விருது வழங்கி கௌவுரவித்துள்ளது.
சிவராஜ் -யை பொருத்தவரை சிறு வயது முதலே வாசிப்பும் எழுத்தும் அவரது வாழ்வோடு கலந்து விட்டது. திண்டுக்கல் மாவட்டம் பழனி கள்ளிமந்தையம் அருகே உள்ள குப்பாய வலசு இவரது சொந்த ஊர்.
பழனி ஆண்டவர் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். திருமணமாகி பிழைப்புக்காக திருப்பூருக்கு வந்த போதிலும் எழுத்தில் இவருக்கு இருந்த ஆர்வம் இவரை விட்டு விலகவில்லை. ஆர்வத்தில் எழுதப்பட்ட முதல் நாவல் தான் 'சின்னானும் ஒரு குருக்கள் தான்'.
கிராமத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை கதை களமாக்கி, அருந்ததியச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை கோயில் அர்ச்சகர் ஆக்குவதுதான் இந்தக் கதை.
இதனால் ஊரில் ஏற்படும் மாற்றங்கள், விளைவுகள் இந்தக் கதையின் உயிர் நாடியாக உள்ளது.
இதுகுறித்து எழுத்தாளர் சிவராஜ் ஈடி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "சிறுவயது முதலே கதை எழுதுவதில் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. பள்ளிப்பருவத்தில் நூலகங்களில் அதிக புத்தகங்களை தேடி படிப்பேன். எனது ஊரில் இருந்த ஏற்றத்தாழ்வுகளை மாற்ற என்ன செய்யலாம் என யோசித்தபோது தான் இதை வைத்து ஒரு நாவல் எழுத தொடங்கினேன்.
அதன் விளைவாக பிறந்ததுதான் இந்த 'சின்னானும் ஒரு குருக்கள் தான்'. பிழைப்புக்காக நான் திருப்பூர் வந்தாலும் இந்த நாவலை முழுமையாக எழுதி முடிக்க மீண்டும் எனது சொந்த கிராமத்திற்கு சென்றேன். ஆறு மாதத்திற்கு மேல் தங்கி அங்கு நான் பார்த்த மனிதர்களை கதைமாந்தர்களாக்கி கதைக்களத்தை உருவாக்கினேன்.
பட்டியலின சாதியிலிருந்து வந்த ஒருவன் எப்படி அர்ச்சகர் ஆகிறார் என்பதே இந்தக் கதை. இந்த நாவலை படித்தவர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை அரசு சட்டம் இயற்றியது மகிழ்ச்சியளிக்கிறது.
எனது நாவலை வாஷிங்டனில் உள்ள அமெரிக்க உலக தமிழ் பல்கலைகழகம் சிறந்த நாவலாக தேர்ந்தெடுத்து மதுரையில் வைத்து என்னை கௌரவித்து விருது வழங்கியது. பல்கலைக் கழக துணைவேந்தர் செல்வகுமார் மணிமேகலைப் பிரசுரத்தின் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன் ஆகியோர் இந்தப் பாராட்டு சான்றிதழ்களையும் விருதுகளையும் வழங்கினார்கள்.
தற்போதைய சூழலில் எனது நாவலை தமிழ்நாட்டில் 8 பேர் எம்பில்( ஆய்வியல் நிறைஞர்) பட்டத்திற்கு ஆய்வு செய்து வருகிறார்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: '18 ஆண்டுகள் கிரிக்கெட் பயணம் நிறைவு': ஓய்வு அறிவித்த பார்தீவ் பட்டேல்