திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகேயுள்ள கள்ளாங்கட்டு வலசு பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. கணவனைப் பிரிந்து வாழும் இவர் மகன் சந்தோஷுடன் (3) வாழ்ந்து வருகிறார். சிறுவன் சந்தோஷ் கடந்த இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லாத நிலையில் வெள்ளகோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் திடீரென சிறுவனுக்கு வலிப்பு வந்ததுடன், சிறுவனது உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது. இதனையடுத்து சிறுவனை கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் முடிவு செய்தனர். வெள்ளக்கோவிலிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
மின்னல் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகாஷ் (21) என்ற இளைஞர் விரைந்து செயல்பட்டதுடன், ஆம்புலன்சின் சைரனை ஒலித்தபடி இரவு 7 மணிக்கு வெள்ளகோவில் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு, ஒரு மணி நேரம் பத்து நிமிடத்தில் 90 கிலோ மீட்டர் தூரமுள்ள கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் சென்றுள்ளார். இதனால் சிறுவனின் உயிர் காப்பாற்றப்பட்டது.
போக்குவரத்து நெரிசலான சாலையில் அதிகப் போக்குவரத்து இருக்கும் நேரத்திலும் சிறுவனைக் காப்பாற்ற வேண்டுமென மின்னல் வேகத்தில் ஆம்புலன்சில் பயணித்துள்ளார் ஆகாஷ்.
இது குறித்து ஆகாஷிடம் கேட்டபோது, "சிறுவனது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் சிறுவனைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தான் பிரதானமாக இருந்தது. உடனடியாக, ஆம்புலன்சில் இருந்த அனைத்து விளக்குகளையும் எரிய விட்டதுடன் சைரனையும் ஒலித்து வேகமாகச் சென்றேன்.
சிறுவனை மருத்துவமனையில் சேர்த்த பிறகே, ஒரு மணி நேரம் பத்து நிமிடத்தில் சென்று சேர்த்தது தெரிய வந்தது. சிறுவனது உயிரைக் காப்பாற்ற முடிந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது" எனத் தெரிவித்தார்.
போக்குவரத்து நெரிசலான நேரத்திலும் சாதுர்யமாகவும் விரைவாகவும் செயல்பட்ட ஆகாஷுக்கு சிறுவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: என்கவுன்டருக்கு ஆதரவான பதிவு: சர்ச்சையில் சிக்கிய ஆட்சியர்!