திருப்பூர்: பல்லடத்தை அடுத்த அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் கபின் - ஏஞ்சலின் ருபீஸியா தம்பதி. இந்த தம்பதியின் நான்கு மாத கைக்குழந்தை சுஜனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு முத்தாண்டி பாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, நேற்று(செப்.28) காலை வீட்டிலிருந்த 4 மாத குழந்தை சுஜன் அசைவற்றுக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் குழந்தையின் மூக்கு, வாயிலிருந்து ரத்தம் வந்ததாக கூறப்படுகிறது. அதனை கண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் அலறி அடித்துக் கொண்டு, குழந்தையை உடனடியாக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தை இறப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது. தடுப்பூசி செலுத்திய பின்னர் 4 மாத பச்சிளங் குழந்தை உயிரிழந்ததாக கூறப்படும் இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை இறப்பு தொடர்பாக திருப்பூர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் ஜெகதீஷன் விளக்கம் அளித்துள்ளார். அதில் "குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பின்னர் தட்டி தூங்க வைக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் குழந்தைகளுக்கு புரையேறி மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. இதே மையத்தில் தடுப்பூசி எடுத்துக் கொண்ட மற்ற 9 குழந்தைகளும் நலமாகவே உள்ளனர். இருப்பினும் குழந்தை உடற்கூராய்வு சோதனை முடிவுகள் வந்த பின்னரே இறப்புக்கான காரணம் முழுமையாக தெரியவரும்" எனக் கூறியுள்ளார்.