மத்திய அரசின் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும். வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று மத்திய அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுத்திருந்தன.
அதன்படி, திருப்பூர் மாநகரில் 7 இடங்கள் உள்பட மாவட்டத்தின் 21 இடங்களில் தொழிற்சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தை மக்களவை உறுப்பினர் சுப்புராயன் தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், ”மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைக்குத் துணைபோகும் மாநில அரசுக்கு எதிராக முடிவிலா போராட்டத்தின் தொடக்கமாக இந்தப் போராட்டம் அமையும்" எனத் தெரிவித்தார்.
பின்னர் மத்திய அஞ்சலகம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர். இப்போராட்டத்தில், தொழிற்சங்கத்தினர் பட்டை நாமம் அணிந்து மண்சட்டியைத் தலையில் கவிழ்த்துவைத்து நூதன முறையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தொழிற்சங்கத்தினர் மீது தடியடி - 300க்கும் மேற்பட்டோர் கைது