திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், 11.28 ஏக்கர் பரப்பளவில் ரூ.336 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுகிறது.
இதற்காக மத்திய அரசு சார்பில் ரூ.195 கோடியும், மாநில அரசு சார்பில் ரூ.141 கோடியே 96 லட்சமும் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளன. தற்போது இதற்கான பணிகள் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன.
இவற்றுக்கு மத்தியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. மருத்துவக் கல்லூரி கட்டடப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், அரசு மருத்துவமனை நிர்வாகம் கட்டடங்களைப் பொதுப்பணித் துறையிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இதையடுத்து ஒப்படைக்கப்பட வேண்டிய கட்டடங்களில் அமைக்கப்பட்டிருந்த சிறப்புப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டிருந்த கரோனா நோயாளிகள் புதிதாக வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புதிய வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர்.
புதிய கட்டடங்களைக் கட்ட, பழைய கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்றது.