திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த செம்மிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கவள்ளி. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.
இந்நிலையில் நேற்று (மார்ச்7) பணி முடிந்து வீடு திரும்பிய மாணிக்கவள்ளி, செம்மிபாளையத்தில் விநாயகர் கோயில் அருகே பச்சிளம் குழந்தை கிடப்பதைப் பார்த்துள்ளனர். அழுது கொண்டிருக்கும் குழந்தையை, உடனடியாக அருகிலுள்ள பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இதுகுறித்து பல்லடம் காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
மருத்துவமனைக்கு விரைந்த காவல் துறையினர் குழந்தையைக் குறித்து விசாரணை நடத்தினர். மேலும், மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்ததில், பிறந்து மூன்று நாள்களே ஆகியுள்ள குழந்தைக்கு முதுகு தண்டுவடத்தில் பிரச்சினை இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, குழந்தையை மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, குழந்தையை கண்டெடுத்த பெண், தானும் உடன் செல்வதாகத் தெரிவித்ததையடுத்து அவரும் ஆம்புலன்சில் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
குழந்தைக்கு முறையான சிகிச்சை அளித்த பின் தொட்டில் குழந்தைகள் திட்டத்தின்கீழ் அக்குழந்தை பராமரிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தையை வீசி சென்றது யார் என்பது குறித்து பல்லடம் மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட தருமபுரி வாசி கைது!