வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜய் (22). வாணியம்பாடியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். இந்நிலையில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக இவர் நேற்று வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார்.
இன்று காலை அஜய் தனது தம்பியுடன் நெக்னாமலைப்பகுதியில் உள்ள தண்ணீர் பாறை என்னும் இடத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பாறையில் குளித்துக்கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் அஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.