திருப்பத்தூர்: பெங்களூருவைச் சேர்ந்த ஜெய்சங்கர் - கிரிஜா தம்பதியரின் மகன் தருண்குமார் (20). இவர் வேலூர் கே.வி.குப்பம் அடுத்த சின்னலத்தேரியிலுள்ள தாய் கிரிஜாவின் சகோதரர் ரமேஷ் என்பவரின் வீட்டில் தங்கி குடியாத்தத்திலுள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில், தாய்மாமாவின் மகள் அடிக்கடி ஆண் நண்பர் ஒருவரை நேரில் சந்தித்து பேசுவதாக தாய் மாமா ரமேஷிடம், தருண்குமார் கூறியுள்ளார்.
அப்போது, 'என் வீட்டிலேயே இருந்துகொண்டு... என் மகளையே தவறாக பேசுகிறாயா’ என ரமேஷ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சேர்ந்து தருண்குமாரை ஆத்திரத்தில் அடித்துள்ளனர். இது குறித்து தருண்குமார், அவரது தாய் கிரிஜாவிடம் தெரிவிக்கவே, பெங்களூருவில் இருந்து சின்னலத்தேரிக்கு வந்து பிரச்னை குறித்து சகோதரர் ரமேஷிடம் முறையிட்டுள்ளார்.
அப்போது ரமேஷ், அவரது மனைவி, மகன் ஆகியோர் சேர்ந்து கொண்டு மீண்டும் தருண்குமார் மற்றும் தாய் கிரிஜாவை தாக்கியுள்ளனர். அதில் தருண்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த தருண்குமார் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.
இதற்கிடையே தருண்குமாரின் தாயார் கிரிஜா, லத்தேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தாய்மாமன் ரமேஷை கைது செய்தனர். மேலும், அவரது குடும்பத்தினரிடமும் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரயிலில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு