திருப்பத்தூர்: வாணியம்பாடி நகராட்சியில் பணியாற்றி வருகிறார் 34 வயது பெண் ஒருவர். அங்கு, வாணியம்பாடி நகராட்சி ஆணையராக சில மாதங்களுக்கு முன்பு ஸ்டாலின் பாபு பொறுப்பேற்றார்.
இந்நிலையில், நகராட்சி ஃபீல்ட் அசிஸ்டன்ட் சரவணன் என்பவர் தினமும் நகராட்சி ஆணையரின் வீட்டு வேலைகளை செய்து கொடுக்குமாறு, 34 வயது இளம்பெண்ணை வற்புறுத்தி வந்ததாகத் தெரிகிறது. அப்போது அப்பெண், தான் யாருடைய வீட்டிற்கும் வேலை செய்ய வேண்டிய தேவை இல்லை எனவும்கூறி தட்டி கழித்ததாக கூறப்படுகிறது.
மேலும், நகராட்சி ஆணையர் ஸ்டாலின் பாபு, பல்வேறு பணிகளை செய்ய துன்புறுத்தி வந்ததாகவும் தெரிகிறது. தொடர்ந்து, அப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரியவருகிறது.
பின்னர், அப்பெண் அவருடைய கணவரிடம் நடந்ததைக் கூறியதன் காரணமாக, பெண்ணின் கணவர், இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் கேட்டுள்ளார். அதன்பின்பு, 'கடந்த 23ஆம் தேதி முதல் வேலைக்கு வர வேண்டாம்' என நகராட்சி ஆணையர் ஸ்டாலின் பாபு கூறியுள்ளார்.
மேலும் தனது பாலியல் இச்சைக்கு ஒத்துழைத்தால் மட்டுமே வேலைக்கு வர முடியும் எனவும் அவர் கூறியதாகத் தெரிகிறது. இதனால், பாதிக்கப்பட்ட பெண் இன்று (ஜூலை 27) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். அதேபோல், வாணியம்பாடி அடுத்த பெரியபேட்டை பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண், தன்னையும் ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகக் கூறி தர்ணாவில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: பழனி அருகே துப்பரவு பணியாளர் கொலை வழக்கு; மகளுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தவர் கைது