திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்துள்ள பன்னாடகுப்பம், ஆத்தூர் பஞ்சாயத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பஞ்சாயத்துப் பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டிற்குச்செல்லும் வழியை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இறந்தவரின் உடலை எடுத்துச்செல்ல அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதற்கு ஓர் தீர்வு காணவும்; மாற்று வழியினை ஏற்பாடு செய்து தரவும் ஊராட்சி மன்றத்தலைவர் செந்தில்குமாரிடம் பலமுறை மக்கள் சார்பாக மனு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஊராட்சி நிர்வாகம் சார்பில் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று ஜோலார்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜ், கேத்தாண்டப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச மிதிவண்டிகள் கொடுக்கும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, வரும்பொழுது, திடீரென ஆத்தூர் பஞ்சாயத்து பொதுமக்கள் சட்டப்பேரவை உறுப்பினரின் வாகனத்தை, வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஜோலார்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜ் அலுவலர்களிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன்பேரில் பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர். முற்றுகையின்போது ஒரு அரசுப் பேருந்தையும் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: 'பள்ளிக்கல்விக்கு நிதி தாருங்கள்' - நிதியமைச்சரை சந்திக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்