ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த மகேந்திரவாடி பகுதியில் அரசு நேரடிக் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்களை விற்பனை செய்கின்றனர்.
இந்த நேரடிக் கொள்முதல் நிலையத்தில் அலுவலர்கள் யாரும் இல்லாமல் இடைத்தரகர்களே நெல் கொள்முதல் செய்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு கொள்முதல் செய்யப்படும் 900 மூட்டைகளில், 40 கிலோ நெல் மூட்டை ஒன்றுக்கு 800 ரூபாய் அரசு தரப்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் இடைத்தரகர்களுக்கு ஒரு மூட்டைக்கு 10 விழுக்காடு அதாவது 80 ரூபாய் வரை விவசாயிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொள்வதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இங்கு அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அதிக அளவில் இடைத்தரகராக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் ஹேம சித்ரா தலைமையில் நெல் கொள்முதல் நிலையத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது நெல் கொள்முதல் நிலையத்திற்குள் இருந்த பத்திற்கும் மேற்பட்ட நபர்கள் லஞ்ச ஒழிப்புத்துறையினரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர்.
தொடர்ந்து, தப்பியோட முயன்ற அனைவரையும் சுற்றிவளைத்து விசாரணைக்கு உள்படுத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர், நெல் கொள்முதல் நிலைய உதவியாளர் சந்திரசேகரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மீதமுள்ள நபர்களிடமிருந்து 49 ஆயிரத்து 300 ரூபாயினைக் கைப்பற்றினர். இதில் அதிமுகவின் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் ரவிச்சந்திரனுக்கும், அதிமுகவில் உள்ள பல்வேறு நிர்வாகிகளுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. இதன் காரணமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 30 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு நெல் கொள்முதல்!