திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் மாணவர் அதிகாரமளிக்கும் திட்டம் விளக்க உரை நிகழ்ச்சி கல்லூரி உள்ளரங்கில் இன்று (ஏப்.25) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் சி.லிக்மிசந்த் ஜெயின் தலைமை வகித்த நிலையில், கல்லூரி முதல்வர் முனைவர் எம்.இன்பவள்ளி அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய தரைவழி மற்றும் விமான போக்குவரத்து இணை அமைச்சர் விஜயகுமார் சிங் கலந்து கொண்டு, மாணவர் அதிகாரமளிக்கும் திட்டம் குறித்து விளக்கிப் பேசினார்.
அப்போது பேசிய அவர், வளர்ச்சியில் இந்தியா உலக அளவில் 2ஆம் அல்லது 3ஆம் இடத்தில் உள்ளதாகவும், மாதம் மாதம் புது புது கண்டுபிடிப்புகள் மேற்கொள்வதால் உலக அளவில் மக்கள் இந்தியாவை கூர்ந்து கவனித்து வருவதாகவும் பெருமிதம் கூறினார்.
மேலும் பேசிய அவர், உலக அளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக உள்ளதாகவும், மற்ற நாடுகளின் வளர்ச்சி 3 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதாகவும் தெரிவித்தார். அதேவேளையில், வெளிநாடுகளில் இந்தியாவின் பாஸ்போர்ட் மதிக்கப்படுவதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: PTR TAPE 2: அண்ணாமலை வெளியிட்ட அதிர்ச்சி ஆடியோ!
மேலும் அவர் பேசுகையில், 'உலகத்தில் உள்ள பெரிய நிறுவனங்களில் இந்தியர்கள் ஆளுமை வர்க்கத்தில் உள்ளனர். உதாரணத்திற்கு நாசாவில் வேலை பார்க்கும் இந்திய விஞ்ஞானிகள் வெளியேறிவிட்டால் நாசாவால் ஒரு ராக்கெட் கூட விண்ணில் அனுப்ப இயலாது. இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் போது ராணுவம் அழைக்கப்படுகிறது. ஏனென்றால், அவர்கள் சாதி பேதமின்றி பணி செய்து வெற்றியை அடைகின்றனர்.
ஆகையால், மாணவர்கள் ஆகிய உங்களுக்கு அருமையான வாய்ப்புகள் உள்ளது. அதனைப் பயன்படுத்தி முன்னேற வேண்டும். உங்களுடைய முன்னேற்றத்திற்கு யாரும் தடையாக இருக்க மாட்டார்கள்' என்று அவர் பேசினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலச் செயலாளர் கோ.வெங்கடேசன், மாவட்ட தலைவர் வாசுதேவன், கல்லூரி பல்வேறு துறை பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆங்கிலத் துறை பேராசிரியை மீனா நன்றி கூறினார்.
இதையும் படிங்க: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக முறை வென்றவர்கள் பற்றி அறிவோமா?