திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஷீராபாத் பகுதியைச் சேர்ந்தவர் ரிஸ்வான் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருள். இவர்கள் இருவரும் வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு பகுதிக்கு சென்று மீண்டும் வாணியம்பாடிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பாலூர் என்ற இடத்தில் எதிராக வந்த இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ரிஸ்வான் மற்றும் அருள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து, ரிஸ்வானை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கும், அருள் என்பவரை பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். ஆனால் இருவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த உமராபாத் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் விபத்துக்குள்ளான இருசக்கர வாகனங்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், ஆம்பூர் - பேர்ணாம்பட்டு சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் மின் விளக்கு இல்லாததே விபத்திற்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.