திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு பெங்களூரூவில் இருந்து சென்னைக்குப் பார்சல் ஏற்றிச்சென்ற லாரியின் பின்பக்கம், பெங்களூரூவில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதனைத்தொடர்ந்து, விபத்துக்குள்ளான கார் மீது பின்னால் வந்த மற்றொரு காரும், மினி லாரியும் அடுத்தடுத்து மோதின. இவ்விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். நள்ளிரவில் விபத்துக்குள்ளானவர்களை மீட்ட நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள், அவர்களை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். படுகாயம் அடைந்தவர்கள் சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளர்கள் என்பதும் குடும்பத்துடன் பெங்களூரூவில் உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பும்போது விபத்து ஏற்பட்டது என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
விபத்தில் படுகாயம் அடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கோகுல் (28) என்பவரும், மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட யோகராஜூ (28) என்பவரும் சிகிச்சைப் பலனின்றி இன்று(டிச.28) காலை உயிரிழந்தனர்.