திருப்பத்துார்: ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமம் குறவன் காலனியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி கல்பனா. இவர் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில், தனது மகளுக்கு எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாக கூறி நான்கு பேர் ரூ.16 லட்சம் மோசடி செய்துள்ளதாக புகார் அளித்தார்.
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, எனது மகள் சந்தியாவை மருத்துவம் படிக்க வைப்பதற்காக நீட் பயிற்சி வகுப்பில் சேர்க்க முடிவெடுத்தேன். ஆனால் நீட் தேர்வு எழுதாமலேயே எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக ஒருவர் மூலம் அறிமுகமான பெங்களூரை சேர்ந்தவர்கள் பிலிப்ஸ் சார்லஸ், அமுது, மோனிகா மற்றும் மார்க் ஆகியோர் என்னிடம் ஆசை வார்த்தை கூறினர்.
அவர்கள் பேசியதை உண்மை என நம்பி நேரடியாகவும், அவர்கள் வழங்கிய வங்கி கணக்கிலும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் பல்வேறு தவணையாக ரூ.16 லட்சத்து 35 ஆயிரத்து 796 ரூபாய் வழங்கியுள்ளேன். ஆனால், அவர்கள் பணம் பெற்ற பிறகு எங்களை தொடர்பு கொள்ளவில்லை, மேலும் மருத்துவ சீட் வாஙி தருவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் நாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தான் வழங்கிய பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தேன். ஆனால் அவர்கள் இதுவரை ரூ.40 ஆயிரம் மட்டுமே திருப்பி கொடுத்துவிட்டு மீத பணத்தை தர மறுக்கிறார்கள் என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பணம் மோசடியில் ஈடுபட்ட பிலிப்ஸ் சார்லஸ் (வயது 43), மோனிகா (வயது 24) ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள அமுது மற்றும் மார்க் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆம்பூர் அருகே தேநீர் கடையில் ஏற்பட்ட தீ விபத்து.. ரூபாய் 2 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்..