திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் பகுதியை சேர்ந்த16 வயது சிறுமியை கடந்த மாதம் 15ஆம் தேதி காணவில்லை என உமராபாத் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த காவல் துறையினர், அணைக்கட்டு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித் திரிந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் பகுதியை சேர்ந்த அஜித் என்பதும், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியை மீட்ட காவல் துறையினர், அஜித்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த உமராபாத் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து, சிறையிலடைத்தனர்.
இதேபோல் ஆம்பூர் அடுத்த பஞ்சப்பள்ளி பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை காணவில்லை என, அவரது தந்தை, உமராபாத் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மாணவியை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று(ஜூலை18) பேர்ணாம்பட்டு பேருந்து நிலையம் அருகே, சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பிடிபட்ட நபர், ஆம்பூர் அடுத்த பந்தேரப்பள்ளி பகுதியை சேர்ந்த உமாபதி என்பதும், அதே பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவியை கடத்தி சென்றதும் தெரியவந்தது. பின் அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், போக்சோ சட்டத்தில் இளைஞரை கைது செய்தனர்.