திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குள்பட்ட ஒட்டப்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒருவர் விபத்துக்குள்ளாகி விழுந்து கிடப்பதாக ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் வந்துள்ளது. இந்தத் தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடனடியாக விபத்துக்குள்ளான நபரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனையில் எடுத்துச்சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் அந்நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், அந்நபர் திருப்பத்தூர் மாவட்டம், சோலையார்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட தாமலேரி முத்தூர் பகுதியைச் சேர்ந்த சிவன் (வயது 30) என்பதும், அவர் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சிவனும், ஜோலார்பேட்டை ஒன்றியம் திரியாலம் பகுதியைச் சேர்ந்த கோழிக்கடையும், பைனான்ஸ் தொழில் செய்து வரும் அவரது நண்பர் ஆனந்த் பாபுவும் (வயது 29) அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிவரும் பெண் ஒருவரைக் காதலித்து வந்ததும் தெரிய வந்தது. ஆனால் அப்பெண் சிவன் மேல் காதல்வயப்பட்டு, தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பெண்ணைத் திருமணம் செய்தால் சிவனைக் கொலை செய்துவிடுவேன் என ஆனந்த் பாபு மிரட்டிவுள்ளார். இதனால் ஏற்பட்ட பயத்தில் சிவன் அப்பெண்ணை திருமணம் செய்ய முன்வராமல் இருந்துள்ளார். இருப்பினும் அப்பெண் தொடர்ந்து வற்புறுத்தியதனால், சிவன் திருமணத்திற்கு சம்மதித்துள்ளார்.
இதையறிந்த ஆனந்த் பாபு, சிவனை தொலைபேசி மூலம் நேற்றிரவு தொடர்பு கொண்டு தனியாக அழைத்துள்ளார். அதன்படி ஒட்டப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் தனியாக சென்ற சிவனை, ஆனந்தபாபு வழிமறித்து இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவான ஆனந்த் பாபுவை வலைவீசித் தேடி வருகின்றனர். ஒரே பெண்ணை இருவர் காதலித்ததால், நீதிமன்ற குமாஸ்தா அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஐடி ஊழியர் உயிருடன் எரித்துக் கொலை : மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு