தஞ்சாவூர்: தஞ்சாவூர் வடக்கு பாமக மாவட்ட செயலாளர் ம.க ஸ்டாலின் மற்றும் பாமகவினர் தஞ்சை கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் கீர்த்திவாசனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், “விசிகவை சேர்ந்த மூவர் மீது சாதி வெறியை தூண்டி, சாதி கலவரத்தை உருவாக்க முயலுகின்றனர். அதை கண்டித்து அவர்களை உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்திட வலியுறுத்தி வரும் நவ.11ம் தேதி திங்கட்கிழமை கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்கு அனுமதி தருமாறு கோரியிருந்தனர்.
மேலும் அந்த மனுவில் கடந்த 4ஆம் தேதி திங்கட்கிழமை புவனகிரியில் நடைபெற்ற விசிக போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் கடலூர் மாவட்ட முன்னாள் செயலாளர் செல்லப்பன் பகிரங்கமாக, வன்னியர் சங்க தலைவர் பு.தா அருள்மொழியின் தலையை வெட்டுவோம் என கொலை மிரட்டல் விடுத்து பேசியுள்ளார்.
அதைபோல் அந்த நிகழ்ச்சியில் பேசிய கடலூர் மாவட்ட செயலாளர் நீதிவள்ளல், தற்போது தமிழகத்தில் நடைபெறுவது திருமா காலம் இன்னும் 42 ஆண்டுகளுக்கு நாங்கள் வன்னியர்களை அடித்துக் கொண்டு தான் இருப்போம் எனக் கூறியுள்ளார். அதே நிகழ்ச்சியில் விசிக மாநில மகளிரணி துணை செயலாளர் செல்வி முருகன் விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கொடி கம்பத்தை தகர்க்க முயன்ற பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு சிறைக்கு செல்வேன் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: "முதலமைச்சர் கோவையை கவர்ந்து விட்டாரா என்பது 2026-ல் தெரியும்" - வானதி சீனிவாசன்!
இவ்வாறு வெளிப்படையாக இந்த மூவரும் பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பொது அமைதியை குலைக்கும் வகையில் உள்ளது. இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும்” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஏற்கனவே பாமக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருந்த நிலையில் காவல்துறை அனுமதி மறுப்பின் காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்று அவர்கள் நவ.11ஆம் தேதி நடத்துவதாக கூறிய உண்ணாவிரத போராட்டத்திக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய உழவர் பேரியக்க மாநில தலைவர் கோ.ஆலயமணி, "காவல்துறையின் தடையை மீறி வரும் 11ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவோம்” என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்