திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி பாப்பண்ணன் (55). இவர் சில மாதங்களுக்கு முன்பு 1 லட்ச ரூபாய் மதிப்பிலான இரண்டு நாட்டு பசு மாடுகள் வாங்கி, விவசாயத்திற்கும், கறவைக்கும் வளர்த்துவந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு முழுவதும் அப்பகுதியில் மழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று மின்சாரப் பணியாளர்கள் மின் கம்பங்களைப் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது கொரட்டி பகுதியிலிருந்து காக்கங்கரை ரயில் நிலையம் வரை செல்லும் சாலையில் 11 ஆயிரம் வாட் மின் அழுத்தம் கொண்ட மின் கம்பத்தில் பழுது ஏற்பட்டிருப்பதைக் கவனிக்காமல், ஊழியர்கள் ஸ்விட்ச்சை ஆன் செய்துள்ளனர். இதனால் மின் கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளது.
அந்தக் கம்பி சாலை அருகே இருந்த மாடுகளின் மீது விழுந்தது. இதனால் மின்சாரம் தாக்கி இரு மாடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மின்சார ஊழியர்களின் அலட்சியப்போக்கால் இரண்டு மாடுகள் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்கள். மேலும் இதுகுறித்து கந்திலி கந்திலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.