திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவருக்கு ஜெய ஸ்ரீ (14) மற்றும் வர்ஷா (12) ஆகிய இரு பெண் குழந்தைகள் இருந்தனர். இவர்கள் இருவரும் ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9 மற்றும் 8 ஆம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று (செப் 15) காலை தண்டபாணி, தனது இரு குழந்தைகளையும் இருசக்கர வாகனத்தில் பள்ளியில் விடுவதற்காக சென்றுள்ளார். அப்போது ஆம்பூர் ஓ.ஏ.ஆர் திரையரங்கம் அருகில் உள்ள சிக்னலில் பைக்கில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது கர்நாடகாவிலிருந்து வேலூர் நோக்கிச் சென்ற கனரக வாகனம், சாலையில் நின்று கொண்டிருந்த தண்டபாணியின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் ஜெய ஸ்ரீ மற்றும் வர்ஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த தண்டபாணியை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய லாரி ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கட்டட வேலையில் ‘லிஃப்ட்’ அறுந்து விழுந்த விபத்து - 8 ஊழியர்கள் பலி!