திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சிக்குட்பட்ட பலகாவப்பலி பகுதியில் உள்ள முருகன் கோயில் மலை அடிவாரத்தில் கடந்த 21.11.2023 அன்று உடலில் பலத்த காயங்களுடன் நிர்வாணப்படுத்தப்பட்டுப் புதைக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக அப்பகுதியில் கால்நடைகள் மேய்ச்சலில் ஈட்டுப்பட்டிருந்தவர்கள் திம்மாம்பேட்டை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மலை அடிவாரத்திற்குச் சென்று அங்குக் குழியில் பாதி புதைக்கப்பட்ட நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக இக்கொலை சம்பவம் குறித்து திம்மாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் மல்லகுண்டா கொய்யான் கொல்லை பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் தனது மகனைக் காணவில்லையென திம்மாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கொலை செய்து புதைக்கப்பட்ட சடலத்தின் அடையாளங்களை ராஜாவிடம் காண்பித்த போது அவர் காணாமல் போன ராஜாவின் மகன் விஜயகுமார் என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ராஜா மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, விஜயகுமார் வெளிநாட்டில் பணிபுரிந்து விட்டுக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவருக்கு ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியைச் சேர்ந்த வினிதா என்பவருடன் திருமணம் ஆகியுள்ள நிலையில், கடந்த மாதம் 10 தேதி வினிதா விஜயகுமாருடன் சண்டையிட்டு தனது தாய் வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனை அடுத்துக் கடந்த 15ஆம் தேதி விஜயகுமார் வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு பலகாவப்பலி பகுதியில் உள்ள முருகர் கோயில் மலை அடிவாரத்தில் புதைக்கப்பட்டிருப்பது காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையிலான தனிப்படை காவல்துறையினருக்கு விஜயகுமாரைக் கொலை செய்தவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் கொலைக் குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை காவல்துறையினர் ஆந்திர மாநிலத்திற்கு விரைந்த விஜயகுமாரை கொலை செய்த நபர்களைப் பிடித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், விஜயகுமாரும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராகவேந்திரன் என்பவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். இந்த நிலையில் விஜயகுமாரின் வீட்டிற்கு ராகவேந்திரன் அடிக்கடி வந்து சென்ற போது விஜயகுமாரின் மனைவி வினிதாவுடன் ராகவேந்திரனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது விஜயகுமார் வேலைக்காக வெளிநாடு சென்ற நிலையில், ராகவேந்திரனுக்கும் வினிதாவிறக்கும் இடையே திருமணத்தை மீறிய தகாத உறவு ஏற்பட்டுள்ளது. விஜயகுமார் மீண்டும் சொந்த ஊருக்கு வந்த போது வினிதா யாருடனோ தகாத உறவில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து தனது நண்பரான ராகவேந்திரனிடமே தனது மனைவி வேறுயாருடனோ தகாத உறவில் இருப்பதாகவும் இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி விஜயகுமாரும், ராகவேந்திரனும் ஒன்றாக பலகாவப்பலி கிராமத்தில் உள்ள முருகன் கோயில் மலை அடிவாரத்தில் மது அருந்தியுள்ளனர்.
அப்பொழுது அதிக மதுபோதையில் இருந்த விஜயகுமாரை, ராகவேந்திரன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்து பின்னர் கத்தியால் உடல் முழுவதும் வெட்டி விட்டு மலை அடிவாரத்தில் உள்ள குழியில் வீசி சென்றுள்ளார்.
இதன் பின்னர் ராகவேந்திரன் தனது நண்பரான சங்கர் என்பவரை அழைத்து வந்து, விஜயகுமாரின் உடலை வேறு இடத்தில் மண்ணை கொட்டி மூடிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது காவல்துறையினரின் முழு விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ராகவேந்திரன் மற்றும் சங்கரைக் கைது செய்த திம்மாம்பேட்டை காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 5வது டி20 போட்டி: அசத்திய முகேஷ் குமார்.. 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!