திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கணேசன் சித்ரா தம்பதி. இவர்களுக்கு 10 வயதில் சதீஷ் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சித்ராவின் தந்தை வேலு என்பவர் இவர்களுடன் வீட்டில் வசித்துவருகிறார். வேலு வேலைக்குச் செல்லாமல், அவ்வப்போது அவருடைய நண்பர் பாலச்சந்திரன் என்பவருடன் சேர்ந்து மது அருந்துவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு (டிச. 09) வீட்டின் அருகில் சதீஷ் விளையாடிக்கொண்டிருந்தபோது வேலுவின் நண்பர் பாலச்சந்திரன் மது அருந்துவதற்காக வேலுவை அழைத்துள்ளார். ஆனால், வேலு தற்போது பணம் இல்லை என்று கூறி அவருடன் செல்லவில்லை. இந்நிலையில், பாலச்சந்திரன் திட்டம் தீட்டி சிறுவன் சதீஷ் அணிந்திருந்த வெள்ளி அரைஞாண் கயிற்றை கொள்ளையடித்துச் சென்று மது அருந்த முடிவுசெய்துள்ளார்.
இதையடுத்து, பாலச்சந்திரன் சிறுவனிடம் பொய்ச் சொல்லி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று ஆள்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சிறுவனின் இடுப்பில் இருந்த அரைஞாண் கயிற்றைப் பறித்துக்கொண்டு சிறுவனை கழுத்தை நெரித்து அருகில் இருந்த குட்டை நீரில் கழுத்தைப் பிடித்து மூழ்கடித்துள்ளார்.
இதில், சிறுவன் மயங்கிய நிலையில் கீழே விழுந்துவிட்டதால், உயிரிழந்ததாகக் கருதி அவனைத் தூக்கிப் புதரில் வீசிவிட்டு வெள்ளி அரைஞான் கயிற்றைப் பறித்துச் சென்று வாணியம்பாடி பஜார் பகுதியில் உள்ள நகைக்கடையில் இரண்டாயிரத்து முன்னூறு ரூபாய்க்கு விற்றுள்ளார்.
அதன்பின்னர், பாலச்சந்திரன் வேலுவிற்கு செல்போனில் தொடர்புகொண்டு மது அருந்துவதற்குத் தேவையான பணத்தை ஏற்பாடு செய்துவிட்டதாகவும், வாணியம்பாடிக்கு வருமாறும் அழைத்துள்ளார். பின்னர் அந்தப் பணத்தில் இருவரும் மது அருந்திவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது, வேலு தன்னுடைய பேரன் எங்கே என்று பாலச்சந்திரனிடம் கேட்டபோது சித்ராவுடன் சென்றுவிட்டதாகக் கூறி சமாளித்துள்ளார்.
சிறிது நேரம் மயக்க நிலையில் இருந்த சதீஷ் மீது மழைத்துளிகள் முகத்தில் விழவே மயக்கம் தெளிந்து அவர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, தன் தாயிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, காயங்களுடன் இருந்த சதீஷை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் அனுமதித்தனர்.
இது குறித்து சித்ரா வாணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பாலச்சந்திரனைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டபோது சிறுவனின் தாத்தாவுடன் சேர்ந்து மது அருந்த பணம் இல்லாததால் இதுபோன்று செய்தது தெரியவந்தது.
பின்னர் சிறுவனின் தாத்தா வேலுவை காவல் துறையினர் கைதுசெய்து இருவரையும் வாணியம்பாடி குற்றவியல் நீதித் துறை நடுவரிடம் முன்னிறுத்தி சிறையிலடைத்தனர். மது அருந்த பணம் இல்லாத விரக்தியில் சிறுவனை தாத்தாவே கொலைசெய்ய முயற்சித்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோயம்பேட்டில் குழந்தைக் கடத்தல்: 16 வயது சிறுவன் உள்பட 6 பேர் கைது!