திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள மருந்தகத்தின் பூட்டை உடைத்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை சேதப்படுத்தி, பின்னர் மருந்தகத்தில் இருந்த 80 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
அதே நாளில், இரவு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள மாராப்பட்டு, அய்யனூர் ஆகிய பகுதிகளில் மளிகை கடை, மருந்தகம் மற்றும் எலக்ட்ரிக் கடையிலும் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டிருப்பதாக புகார் எழுந்த நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனையடுத்து, ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கடைகளை குறிவைத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுப்பட்ட நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில், வந்தவாசி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுப்பட்ட நபர்கள் இருப்பதாக ஆம்பூர் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த ரகசிய தகவலின் பேரில், வந்தவாசி பகுதிக்கு விரைந்த தனிப்படை போலீசார், வந்தவாசி போலீசாரின் உதவியுடன், ஆம்பூர் சுற்றுவட்டார பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கடைகளில் கொள்ளையடித்துச் சென்ற நபர்களை பிடித்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதில், அந்த நபர்கள் சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சூர்யாவிக்ரம் மற்றும் சென்னை பட்டாபிராமைச் சேர்ந்த கௌதம் எனவும், மேலும் இருவரும் ஆம்பூர் சுற்றுவட்டார தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ளே கடைகளில் கொள்ளையடித்து விட்டு, இருசக்கர வாகனத்திலேயே சென்னை சென்றது தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, உடனடியாக குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்த தனிப்படை காவல்துறையினர், அவர்களை ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து, அவர்களிடம் மேலும் விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் இருவர் மீதும் சென்னையில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.