திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சி.எல் சாலை, பெரிய பேட்டை, ஷாகிராபாத் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களாக தொடர் இருசக்கர வாகன கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இது குறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இருசக்கர வாகனங்கள் திருடுபோன இடங்களிலுள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், பெருமாள்பேட்டை பகுதியில் வாணியாம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்த சாமி தலைமையிலான காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், இருவரும் வாணியம்பாடி நாடார் காலனி பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(22) மற்றும் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார்(21) என்பது தெரியவந்தது. மேலும், இருவரும் தொடர் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து ஆறு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:16 வயது சிறுவன் போக்சோவில் கைது!