திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர், கட்டட ஒப்பந்ததாரின் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நெக்குந்தி பகுதியில் புதியதாக வீடு ஒன்று கட்டி வரும் நிலையில் அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் வாடகைக்கு தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் குணசேகரன் நெக்குந்தி பகுதியில் கட்டி வரும் புதிய வீட்டில் உள்ள பீரோவில் 15 லட்சம் ரூபாய் பணத்தை வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களாக கட்டிட வேலை நடைபெறாத நிலையில் குணசேகரன் புதிய வீட்டிற்குச் செல்லாமல் இருந்துள்ளார்.
வெகு நாட்களுக்குப் பிறகு இன்று (ஆக.25) அவர் மீண்டும் புதிய வீட்டிற்குச் சென்று பீரோவில் வைத்திருந்த 15 லட்சம் ரூபாய் பணத்தை பார்த்துள்ளார். ஆனால், அங்கு பணம் ஏதும் இல்லை. 15 லட்சம் ரூபாய் பணம் திருடுபோனதாக எண்ணிய குணசேகரன், உடனடியாக வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்திற்குச் சென்று 15 லட்சம் ரூபாய் பணம் திருடுபோனதாக கூறி புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் குணசேகரின் வீட்டில் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது வீட்டின் கதவுகள் மற்றும் பீரோ உடைக்கப்படாத நிலையில் இருந்துள்ளது. வீட்டில் சந்தேகம்படும்படி எந்த ஒரு சம்பவமும் ஏற்படாததால் காவல் துறையினர் குழப்படைந்தனர்.
தொடர்ந்து, பணம் வைக்கப்பட்டிருந்த பீரோவில் நன்றாக சோதனை செய்தபோது பீரோவிலேயே 15 லட்சம் ரூபாய் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து குணசேகரன் பீரோவில் வைக்கப்பட்ட பணத்தை சரியாக கவனிக்காமல் பதற்றத்தில் பணம் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தது தெரியவந்தது.
மேலும், 15 லட்சம் ரூபாய் பணத்தை உடனடியாக வங்கியில் செலுத்தி வைக்கும் படி காவல் துறையினர் அறிவுறுத்தியதின் பேரில் குணசேகரன் உடனடியாக தனது வங்கி கணக்கில் செலுத்தினார்.
இதையும் படிங்க: யாரென்று தெரிகிறதா!... ஆக்ரோஷமாக கதவை உடைத்து வரும் காட்டெருமை!