திருப்பத்தூர்: ரகுபதியூர் பகுதியைச் சேர்ந்த முருகன், சாந்தி தம்பதியினரின் மகன் நவீன்குமார் (29) அதே பகுதியில் அழகுநிலையம் வைத்து நடந்திவந்தார். இவருக்கு குரும்பேரி கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் மகள் விசித்ரா (23) என்பவருடன் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துவைத்துள்ளனர்.
இவர்களுக்கு மோனிஷ் (4) என்கிற மகனும், தன்ஷிகா (2) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் மனைவி விசித்ராவின் அத்தை மகன் குமாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (24) என்பவருடன் நண்பர்களாகப் பழகிவந்துள்ளார்.
இந்த நிலையில் விசித்ரா, சீனிவாசன் இருவருக்குமிடையே திருமண பந்தத்தைத் தாண்டிய உறவு இருந்துவந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து கடந்த 4ஆம் தேதி விசித்ரா, சீனிவாசன் இருவரும் சேர்ந்து நவீன்குமார் வாயில் நுரையுடன் மயக்க நிலையில் இருக்கிறார் எனக் கூறி நவீன்குமாரின் தந்தை முருகனிடம் கூறியுள்ளனர்.
அதன் பின்னர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற பொழுது பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே நவீன்குமார் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதன்பேரில் இரண்டு நாள்களுக்கு முன்பு நவீன்குமாரை அடக்கம் செய்தனர்.
மகன் இறப்பில் சந்தேகம் - தந்தை புகார்!
இதனால் முருகன் தனது மருமகள் மீது உள்ள சந்தேகத்தின்பேரில் தொலைபேசியை ஆராய்ந்தபோது அதிக நேரம் சீனிவாசனுடன் விசித்ரா பேசியுள்ளது தெரிந்தது. அதனைத் தொடர்ந்து விசித்ரா தான் தனது மகன் கொலைக்குக் காரணம் எனக் கூறித் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் முருகன், உறவினர்கள் புகார் அளித்தனர்.
இதனையடுத்து காவல் துறையினர் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் அடக்கம் செய்த நவீன்குமார் உடலைத் தோண்டி எடுத்து மறு உடற்கூராய்வு செய்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும், எனச் சென்ற பிப்ரவரி 8 அன்று பெற்றோர், உறவினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக நேற்று திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் முன்னிலையில் திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் பாதுகாப்புடன் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவர் கலைச்செல்வியுடன் நான்கு பேர் கொண்ட குழு நவீன்குமார் உடலைத் தோண்டி எடுத்து மறு உடற்கூராய்வுக்குத் தேவைப்படும் உடல் பாகங்களை எடுத்துச் சென்றனர்.
மேலும் மறு உடற்கூராய்வுக்குப் பின்னரே நவீன்குமார் கொலைசெய்யப்பட்டாரா? என்று தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:வாகன விபத்தில் காவலர் உயிரிழப்பு: அஞ்சலி செலுத்திய ஆணையர் ரவி