திருப்பத்தூர்: சென்னை - மைசூர் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய இளைஞரை ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் இருந்து மைசூர் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயில் இன்று (மார்ச் 28) காலை 8:15 மணி அளவில் புறப்பட்டு காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி வழியாக சென்று கொண்டிருந்தது.
இந்த ரயில் வாணியம்பாடி அடுத்த புதூர் பகுதியிக்கு வந்தபோது திடீரென ரயிலின் எஸ் 14 கோச் பெட்டியின் கண்ணாடி மீது கல் வீசப்பட்டுள்ளது. இதைக்கண்ட பயணிகள் ரயில் ஓட்டுநர் மற்றும் டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் வந்தே பாரத் ரயிலின் ஓட்டுநர், ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்த உடன் ரயில்வே போலீசாரிம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வாணியம்பாடி புதூர் அடுத்த திருமாஞ்சோலை பகுதியை சேர்ந்த குபேந்திரன் (21) என்பவர் ரயில் மீது கல் வீசப்பட்ட நேரத்தில் ரயில்வே தண்டவாளத்தின் அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
அதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவரே வந்தே பாரத் ரயில் மீது கல் வீசியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், அவர் மதுபோதையில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசியதாக தெரிவித்துள்ளார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது அடுத்தக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவரை வாணியம்பாடி போலீசாரிடம் ஒப்படைக்க ரயில்வே போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு - மர்ம நபர்களை அடையாளம் கண்டதாக ரயில்வே அறிவிப்பு...