திருப்பத்தூர்: வாணியம்பாடி கோனாமேடு பகுதியில் பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகம் உள்ளது. இங்கு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் வளர்க்கப்படும் ‘பட்டுக்கூடுகளை’ விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
விவசாயிகள் குற்றச்சாட்டு
பட்டுக்கூடுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும், குறைவான விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்கக் கோரி 12 விவசாயிகள் மூன்று மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தனர்.
அதன்பேரில், வாணியம்பாடியில் உள்ள பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று காலை சென்றனர். அப்போது விவசாயிகளிடம் உரிய விசாரணை செய்யவில்லை என தெரிவித்த விவசாயிகள், காவல்துறையினரை வைத்து மிரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நிற்கதியாய் நிற்கும் விவசாயி
இது தொடர்பாக பேசிய பட்டு விவசாயி கோவிந்தராஜ்,’திருப்பத்தூர் மாவட்டத்தில் 400 விவசாயிகள் பட்டுக்கூடுகளை வளர்த்து வருகின்றனர். அதில் 10 விவசாயிகள் மட்டுமே கூடுகளை கொண்டு வந்து இங்கு போடுகிறோம். ஆனால் அவர்களுக்கும் உரிய பணம் தராமல் 3 மாத காலம் அவகாசம் கேட்கிறார்கள்.
இதனால் ஒரு விவசாயிக்கு ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. தமிழ்நாடு அரசு ஆயிரம் கோடி ரூபாய் பட்டு விவசாயிகளுக்காக ஒதுக்கியுள்ளது. அதனால் எங்களுக்கு என்ன பயன் இருக்கப் போகிறது?’என ஆதங்கப்பட்டார்.
விவசாயி அல்லாத நபருக்கு விருது
ஆண்டுதோறும் தமிழ்நாட்டு விவசாயிகளை பெருமைப்படுத்தும் விருது வழங்கப்படுகிறது. கடந்த முறை சிறந்த விவசாயிக்கான விருது பெற்றவர் விவசாய நிலமே இல்லாதவர் என்ற குற்றச்சாட்டையும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் முன்வைக்கின்றனர்.
உயிரிழந்த விவசாயிகளின் பெயரில் கணக்கு காட்டி பல முறைகேடுகள் நடப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இப்பிரச்சினையில் தமிழ்நாடு அரசு தலையிட்டு நல்ல தீர்வு காண வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:'பணம் இல்லை.. பலம் இருக்கிறது..' - மகனை நம்பி பணியைத் தொடங்கிய விவசாயி