திருப்பத்தூரை அடுத்த விஷமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வீரப்பசெட்டியார் மகன் மாரிமுத்து (45). இவர், கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளில் உள்ள பிஏசிஎல் இந்தியா லிமிடெட் என்கிற ஒரு தனியார் நிதி நிறுவனத்தில ஏஜென்ட்டாக பணிபுரிவதாகக் கூறப்படுகிறது.
இவர், நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளராக உள்ள திருப்பத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி பெண்களிடம் மாதத் தவணை கட்ட சொல்லி பணம் வாங்கி, நிறுவனத்தில் கட்டி விடுவதாகக் கூறி பணம் பெற்று வந்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாரிமுத்துவிடம் பணம் கட்டி, முதிர்வான முதலீட்டுத் தொகையைத் திருப்பித் தருமாறு அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கேட்டதற்கு தனக்கு தெரியாது கம்பெனியிடம் போய் கேளுங்கள் எனவும், பணம் எல்லாம் திருப்பித் தர முடியாது நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள் என்றும் கறாராக பதிலளித்துள்ளார்.
இந்தநிலையில், மாரிமுத்து ஏஜென்ட்டாக வேலை பார்த்து வந்த நிதி நிறுவனம், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே மூடப்பட்டுவிட்டது என்பதை அண்மையில் அவரிடம்(மாரிமுத்து) பணம் கட்டிய 25க்கும் மேற்பட்ட பெண்களுக்கு உண்மை தெரியவந்தது.
இதில் ஆத்திரமடைந்த பெண்களின் குடும்பத்தினர் ஒன்று திரண்டு மாரிமுத்துவை சிறைப்பிடித்து தாக்கினர். பின்னர் இச்சம்பவம் குறித்து அவர்கள் காவல்நிலையத்துக்குத் தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மாரிமுத்துவை கைது செய்ததோடு, பணத்தைப் பெற்று தருவதாக உறுதியளித்தனர்.
தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை பெற்று மோசடியில் பிஏசிஎல் நிறுவனம் ஈடுபட்டதும், இந்நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த முதலீட்டாளர்களுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, நிறுவன சொத்துகளை விற்று பணம் திரும்ப வழங்கும் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விசாரணைக் கைதியான கர்ப்பிணிப் பெண் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம்!