வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கரோனா தொற்று நிலவரம் குறித்து மூன்று மாவட்ட ஆட்சியர்களுடன், அமைச்சர்கள் கே.சி. வீரமணி, நீலோபர் கபீல் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அப்போது மூன்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களும் உடனிருந்தனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் நீலோபர் கபீல் பேசும்போது, "ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் தொற்றால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்குத் தனி வசதி செய்துதர வேண்டும். வாணியம்பாடியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டபோது, அவர்களுக்குத் தனி அறை கொடுக்க நான் அலுவலகர்களைத் தொடர்புகொண்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் விசாரிக்க வேண்டும்" என்றார்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வீரமணி, "ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இதுவரை 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இறப்பு விகிதம் ஒரு விழுக்காடு மட்டுமே உள்ளது. சிறப்பான பணிகளை மேற்கொண்டுவருகிறோம்.
ஆனால், திமுகாவைச் சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள் நோயாளிகளுக்கு படுக்கை இல்லை, தண்ணீர் வசதி இல்லை என பொய் புகார்களை கூறுகின்றனர். எங்களது அமைச்சர்களுக்கும் எம்எல்ஏக்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு நாங்கள் பணிசெய்துவருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: 'கரோனா தடுப்பில் விவேகம்தான் முக்கியம்; வீரம் அல்ல' - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்