உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் நேற்று (மார்ச் 24) நள்ளிரவு 12 மணி முதல் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்தார். மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுமக்களின் அன்றாட தேவைகளுக்காக, மளிகை கடை, காய்கறி கடை, இறைச்சிக் கடை, மெடிக்கல், மருத்துவமனைகள் ஆகியவை ஒருசில நிபந்தனைகளுடன் செயல்படலாம் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், திருப்பத்தூர் நகரில் இயங்கும் எம்ஜிஆர் காய்கறி மார்க்கெட்டில் பொருட்களின் விலையை இரண்டு, மூன்று மடங்குக்கு அதிக விலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். அங்கு ஐந்து ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது 20 ரூபாய்க்கும், 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கும் என பல்வேறு காய்கறிகளின் விலை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
இச்சமயத்தை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மருத்துவர்கள் தங்கள் இல்லத்திற்கு செல்ல வேண்டாம் - மக்கள் நல்வாழ்வுத் துறை