திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் இந்து மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் பங்கேற்று பயிற்சி ஆசிரியர்களுக்கு பல்வேறு வழிமுறைகளை விளக்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள 1159 அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
இந்தப் பயிற்சியில் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் சிறப்பாக செயல்படுத்திவருகின்றனர். மேலும் ஆயிரம் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். கரோனா பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயிற்சி ஆசிரியர்களுக்கு கபசுரக் குடிநீர், கிருமி நாசினி, முகக்கவசம், மருத்துவ வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தேர்தல் விதிமீறல்களை தடுக்கும் வகையில் மூன்று நிலை குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. அதனடிப்படையில் மாவட்டத்தில் தற்போதுவரை 24 லட்ச ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளன” என்றார்.