திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்தவர் எம்.செந்தில்குமார் (47). இவர் வாணியம்பாடி அடுத்த ஆத்துமேடு பகுதியில் ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நடத்தி வருகிறார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி அன்று தனது இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடி அருகே நியூடவுன் என்கிற பகுதிக்கு நடைப்பயிற்சிக்காகச் சென்றபோது, மர்ம கும்பல் செந்தில்குமாரை தடுத்து நிறுத்தி கடத்தி சென்றனர்.
பின்னர், செந்தில்குமாரின் சகோதரர் உதயசந்திரன் என்பவரைத் தொடர்பு கொண்டு, செந்தில்குமாரை உயிருடன் விட வேண்டும் என்றால் தங்களுக்கு 1 கோடி ரூபாய் பணம் தருமாறும், சில மணி நேரங்களில் 50 லட்சம் ரூபாய் தருமாறு மிரட்டியதோடு, பணத்தை கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு கொண்டு வருமாறு கூறியுள்ளனர்.
அதனை அடுத்து கடத்தப்பட்ட தனியார் பள்ளி தாளாளர் செந்திகுமாரின் சகோதரர் உதயசந்திரன், கடத்தல் கும்பல் மிரட்டி கேட்ட பணத்தை எடுத்துக் கொண்டு, அவர்கள் கூறியது போன்று கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை பகுதிக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் பணத்தை பெற்றுக்கொண்ட கடத்தல் கும்பல், செந்தில்குமாரை விட்டுவிட்டு காரில் தப்பி சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: ராணிப்பேட்டையில் ஓடும் காரில் பைனான்சியரிடம் ரூ.15 லட்சம் கொள்ளை!
இச்சம்பவம் குறித்து கடத்தப்பட்ட செந்தில்குமார் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கடத்திய கும்பலை தேடி வந்தனர்.
அதனை அடுத்து ஆம்பூர் அருகே உள்ள வடச்சேரி எனும் கிராமத்தை சேர்ந்த ஹரி (33), சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த கலீல் இப்ராஹிம் (32), அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (35), சென்னை கொடுங்கையூரை சேர்ந்த முத்து (29) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.
திருப்பத்தூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்து, நேற்று (நவ.8) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் தனியார் பள்ளி தாளாளர் செந்தில்குமாரை கடத்திய ஹரி, இப்ராஹிம், உதயகுமார், முத்து ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க: மஞ்சுவிரட்டு போட்டியில் கணவர் பலி; இழப்பீடு கோரிய மனு மீது கலெக்டர் பதிலளிக்க ஆணை!