திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் பீமக்குளம் மற்றும் நாயக்கனூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் சுமார் 3 கி.மீ. தொலைவிற்கு நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பீமக்குளம் மற்றும் நாயக்கனூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மளிகை, பேக்கரி, தேனீர் ஆகிய கடைகளை ஆய்வு செய்து, கடைகளில் இருப்பு வைத்திருந்த பிளாஸ்டிக் பைகளை அகற்றப்பட்டு, கடை உரிமையாளர்களை பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் மஞ்சப்பைகளை தான் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கினார்.
நாயக்கனூர் ஊராட்சியில் ரூ. 23.57 லட்சம் மதிப்பீட்டில் 1,800 சதுர அடி பரப்பளவில் நடைபெற்று வரும் நாயக்கனூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டுமான பணியை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஊராட்சி செயலருக்கு அறிவுரை வழங்கினார். இதைத்தொடர்ந்து சாலை ஓரங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றப்பட வேண்டும், ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் எங்கும் குப்பைகள் தேங்காதவாறு தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பொது மக்களுக்கு வழங்கப்படுகின்ற குடிநீர் தொட்டியை ஆய்வு செய்து, அதனை தூய்மைப்படுத்த உத்தரவிட்டார். மேலும், பீமகுளம் பகுதியில் உள்ள ஸ்ரீ சென்றயா சாமி கோவிலில் சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். ஆய்வு பணிகளின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, வனவர் ஆனந்த் குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, மேகலா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:ரூ.105.08 கோடி மதிப்பீட்டில் 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்