திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கைலாசகிரி பகுதியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் சிறப்பு மனு நீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் கலந்துகொண்டு 173 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, பிரதமரின் குடியிருப்புத் திட்டம், அம்மா இருசக்கர வாகனம், முதியோர் உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், தாய் - சேய் நலப்பெட்டகம், விலையில்லா சலவைப் பெட்டி உள்ளிட்ட ஒரு கோடியே 33 லட்சத்து 71 ஆயிரம் மதிப்புள்ள நலத் திட்டங்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில்,"அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு விரைவாகச் சென்றடைய வேண்டும் என்பது தமிழ்நாடு முதலமைச்சரின் கட்டளை. அதுபோல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிறப்பு மனுநீதி நாள் முகாமை முதலமைச்சர் தொடங்கி வைத்து, ஒவ்வொரு கிராமத்தில் உள்ள மக்களுக்கு அவர்களுடைய கோரிக்கைகளுக்குத் தீர்வு கண்டு அவர்கள் இருக்கும் இடத்திலேயே சென்றடைய வேண்டும்.
அதனடிப்படையில், மாவட்டம் பிரிக்கப்பட்ட சில மாதத்திலேயே திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுபோன்ற முகாம்களை நடத்தி இதுவரை 10 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு அதற்கான தீர்வு காணப்பட்டுள்ளன. அரசு இன்றைய காலகட்டத்தில் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 50 விழுக்காடு மழைப் பொழிகிறது.
அதனடிப்படையில் தண்ணீரை சிக்கனமாக சேமித்து வைக்க இன்றைக்கு விவசாயிகளுக்கு சொட்டு நீர்ப் பாசனம், நுண்ணுயிர் பாசனத் திட்டத்தை அரசு சிறப்பாக செயல்படுத்தி, சிறு குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானிய விலையில் வழங்கிக் கொண்டிருக்கிறது. அதே போல், இதர விவசாயிகளுக்கு 90 விழுக்காடு மானிய விலையில் வழங்கி, இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சிலப் பகுதிகளில் பெண் குழந்தைகள் வேண்டாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆம்பூர் அருகே ஒரு கிராமத்தில், நான்கு பெண் குழந்தைகளில் நான்காவதாக பிறந்த பெண் குழந்தை சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்துள்ளதாக, அவருடைய பெற்றோர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இன்றைக்குப் பெண் குழந்தைகள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து மாவட்ட ஆட்சியர், நீதிபதி, அரசு பல்வேறு துறை அலுவலர்கள் எனப் பல பொறுப்புகள் வகிக்கின்றனர். ஆகையால் பெண் குழந்தைகள் வேண்டாமென தவிர்ப்பதை மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இன்றைக்குப் பல சிரமங்களையும் மீறி, சுகாதாரத்துறையில் தமிழ்நாடு நாட்டிலேயே முதல் மாநிலமாக விளங்குகிறது" எனத் தெரிவித்தார்.