திருப்பத்தூர்: அரசு தலைமை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை தொடர்ந்து அலைக்கழித்து வருவதால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நோயாளிகளின் உறவினர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் டயாலிசிஸ் செய்வதற்காக இம்மருத்துவமனையை நாடி வருகின்றனர். இங்கு டயாலிசிஸ் நோயாளிகளுக்கு ரத்தம் சுத்திகரிக்க பயன்படுத்தப்படும் குழாய், ஒரு நோயாளிக்கு ஒன்று என்ற வீதத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் இன்று டயாலிசிஸ் செய்ய வந்த நோயாளிகள் அனைவருக்கும் ஒரே குழாயயை பயன்படுத்த ஊழியர்கள் முற்பட்டதால் நோயாளிகளின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
டயாலிசிஸ் மையம் முற்றுகை
தொடர்ந்து டயாலிசிஸ் மையத்தை முற்றுகையிட்ட அவர்கள், இவ்வாறு பயன்படுத்தினால் ஒரு நோயாளிக்கு உள்ள நோய், மற்ற நோயாளிகளுக்கும் பரவும் அபாயம் இருப்பதாகவும் கூறினர். மருத்துவமனை மருத்துவ அலுவலர் நோயாளிகளை மருந்துப் பொருள்கள் வாங்கி வரக் கூறி அலைக்கழிப்பதாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
அலுவலர் அலட்சியம்
இது குறித்து மருத்துவ அலுவலர் குமரவேலிடம் விளக்கம் கேட்க பொதுமக்கள் முற்பட்ட போது, அவர் தங்களை தரக்குறைவாகவும், தங்களிடம் அலட்சியமாகவும் பேசுவதாகக் கூறினர்.
மெலும், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை வெளி மருத்துவமனைகளுக்கு மருத்துவ அலுவலர் கூறுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், நோயாளிகளை அலைக்கழிக்கும் மருத்துவ அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் டயாலிசிஸ் நோயாளிகளை அரசு காக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தனியார் ஒப்பந்தாரரை கண்டித்து சாலை மறியல்