திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த லாலாஏரி கிராமத்தைச் சேர்ந்தவர் அஷ்வினி (23). இவருடைய கணவர் சூர்யா ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக துணை அமைப்பாளராக உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 6ஆம் தேதி அன்று இந்திரா நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென சிலர் சூர்யாவை கடுமையாக தாக்கியுள்ளனர்.
அப்போது அஷ்வினி கூச்சலிடவே, அவர்கள் தப்பியுள்ளனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சூரியாவை மீட்ட அஷ்வினி, அவரை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். சூர்யா அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதுகுறித்து காவல்துறையினயிடரிம் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், சூர்யாவிற்கு ஏற்கனவே வாணியம்பாடி நகர திமுகவினரை சேர்ந்த சிலருக்கும் அரசியல் முன்விரோதம் இருந்ததாகவும், அதன்பேரில் தற்போது இச்சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், அஸ்வினி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தார்.
அதில், “நானும் எனது கணவரும், வாணியம்பாடி இந்திரா நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, குணா, நிர்மல், அப்பு, தயாளன், பவன், மற்றும் சிலர் எனது கணவரை அரிவாளால் வெட்டி கடுமையாக தாக்கினர். வாணியம்பாடி திமுக நகர செயலாளர் சாரதி குமார் தூண்டுதலின் பெயரில் எனது கணவர் தாக்கப்பட்டுள்ளார்.
தற்போது எனது கண்வர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எனது கணவரை தாக்கியவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நிச்சயதார்த்த நாளில் Ex-காதலனால் கடத்தப்பட்ட பெண்; சினிமாவை மிஞ்சும் நிஜம்