திருப்பத்தூர்: தோக்கியம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருது விடும் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.
தொடர்ந்து 67ஆம் ஆண்டாக நடத்தப்படும் இந்த திருவிழாவை தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திர பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி கொடியசைத்து தொடங்கிவைத்தார். காலை 9:00 மணிக்கு தொடங்கிய இவ்விழாவிற்கு பகல் 2 மணிவரை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.
இதில் திருப்பத்தூர், ஆந்திரா, மல்லானூர், நாட்டறம்பள்ளி, பருகூர், வாணியம்பாடி ஆகிய இடங்களில் இருந்தும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் 300க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்துகொண்டன. இவ்விழா தமிழ்நாடு அரசின் நிபந்தனைக்குட்பட்டு நடத்தப்பட்டன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... கெத்து காட்டும் மாடுகளும் வீரர்களும்
மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்னர்தான் மாடுகளை விட அனுமதியளிக்கப்பட்டது. ஒவ்வொரு காளை மாடும் இரண்டு சுற்றுகள் விடபட்டன. இதில் வேகமாக ஓடிய காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.40ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ.30ஆயிரமும், மூன்றாவது பரிசாக ரூ.20 ஆயிரமும் என மொத்தம் 27 பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள், காளை பிரியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு காளை ஓட்டத்தை கண்டு ஆர்ப்பரித்துச் சென்றனர்.