திருப்பத்தூர்: தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு, ஊரக உள்ளாட்சித் தேர்தலானது வருகிற அக்டோபர் 6, 9 தேதிகளில், இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. மேலும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள இடங்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு, தேர்தல் பரப்புரைகள் நடைபெற்றுவருகிறது.
அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பாக, மாதனூர் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு, விண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த போஸ் என்பவர் போட்டியிடுகிறார்.
கட்சியின் கொடி கிழிப்பு
இவர் நேற்று (அக்டோபர் 3) தனது ஆதரவாளர்களுடன், விண்ணமங்கலம் கிராமத்தில், வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த விஜி என்ற திமுகவைச் சேர்ந்த மதுப்பிரியர் போதையில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்த இளைஞர்களை அவதூறாகப் பேசி, அக்கட்சியின் கொடியினைக் கிழித்து, பின்னர் கோடாரியால் அவர்களைத் தாக்க முயன்றார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியினர் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், விஜியைக் கைதுசெய்து, ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ஷாருக்கானின் மகன் உள்பட மூன்று பேரை இரண்டு நாள்கள் காவலில் வைக்க கோரிக்கை...