திருப்பத்தூர்: கந்திலி அடுத்த கிழக்குபதனவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (30). இவருக்கும் ஜல்லியூர் பகுதியைச் சேர்ந்த சத்யா என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இருவருக்கும் திருமணம் ஆன மூன்று மாதத்தில் இருந்து அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சிவகுமாரின் தந்தை மற்றும் தாய் இறந்த நிலையில் திருமணம் ஆன நாள் முதல் நேற்று வரை கிட்டத்தட்ட 100 பஞ்சாயத்து நடத்தி உள்ளனர். பீடி சுற்றும் தொழில் செய்து வந்த சத்யா தினம் தினம் சிவகுமாருடன் போராடி வாழ்ந்து வந்துள்ளார். இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்துவரும் நிலையில் நேற்று வழக்கம் போல தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் சத்யா கோபித்து கொண்டு இரண்டாவது மற்றும் பச்சிளங் குழந்தையான மூன்றாவது மகளை வீட்டிலேயே விட்டுச் மூத்த மகளை மட்டும் உடன் அழைத்து கொண்டு தனது தாய் வீடான ஜல்லியூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். டிராக்டர் வைத்து கொண்டு விவசாய பணிகளை செய்துவரும் சிவகுமார் வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகளுடன் இருந்து வந்துள்ளார்.
14 மாத குழந்தை பாலுக்கு அழுதுள்ளது. குழந்தையை சமாதானம் செய்ய முடியாத சிவகுமார், கொஞ்சம் கூட இறக்கம் இல்லாமல் பாலில் விஷத்தை கலந்து கடைசி குழந்தைக்கு முதலில் கொடுத்துள்ளார். பின்னர் இரண்டாவது குழந்தைக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.
அந்த குழந்தை சாப்பிட முடியாமல் வாந்தி எடுத்துள்ளது. இதனைக் கண்டு பயந்து போன சிவகுமார் அருகில் இருக்கும் அவரது அண்ணனுக்கு போன் செய்து குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டேன் நானும் குடித்து விட்டேன் என்று தகவல் கூறியுள்ளார். இதனை அறிந்த அவரது அண்ணன் உடனடியாக அவசர ஊரதிக்கு தகவல் கொடுத்தார். பின்னர், அதன் மூலம் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் பால் குடிக்கும் கடைசி குழந்தையான 14 மாத குழந்தை மித்ரா (எ) வேண்டாமணி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். சிவகுமார் மற்றும் அவரது இரண்டாவது குழந்தை தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிவக்குமார் இந்த முடிவை ஏன் எடுத்தார்? இதற்கு காரணம் என்ன? என்பது குறித்து கந்திலி காவல் துறையினர் தொடர்ந்து அவரது மனைவி, உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றெடுத்த சிறுமி.. சேலம் போலீசார் விசாரணை!