வேலூர்: அணைகட்டு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் ரவிசந்திரன் இவர், நேற்று(நவ.10) மாலை பள்ளியில் இருந்த போது அப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் அனைவரும் படிக்காமல் வகுப்பறையில் விளையாடி கொண்டிருந்தாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தலைமை ஆசிரியர் ரவிசந்திரன் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் பள்ளி மைதானத்தை சுற்றி வர வேண்டும் உத்தரவிட்டுள்ளார். உடனடியாக ஒன்பதாம் வகுப்பில் பயிலும் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி மைதானத்தை சுற்றும் போது மோகன்ராஜ் என்ற மாணவன் ரவிசந்திரனிடம் தனக்கு மயக்கம் வருவதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் மோகன்ராஜ் மைதானத்தில் மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக இதுகுறித்து சக மாணவர்கள் தலைமை ஆசிரியரான ரவிசந்திரனிடம் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு விரைந்த அணைகட்டு காவல்துறையினர் மாணவனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்வு குறித்து வழக்குபதிவு செய்து, மாணவனின் பெற்றோரிடம் மாணவனுக்கு ஏற்கனவே உடல்நலக்குறைவு உள்ளதா எனவும் மேலும் தலைமையாசிரியர் ரவிசந்திரனிடமும் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 28 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை