திருப்பத்தூர்: மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில், தூய்மைப் பணியாளர்களின் மறு வாழ்வு செயலாக்க திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் பங்கேற்று பேசினார்.
தொடர்ந்து, ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் பகுதிகளைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது ஜோலார்பேட்டையில் நாளொன்றுக்கு 420 ரூபாயும், திருப்பத்தூரில் 320 ரூபாயும் மட்டுமே ஊதியமாக வழங்குகின்றனர் என தூய்மைப் பணியாளர்கள் அவரிடம் புகார் தெரிவித்தனர். மேலும் ஊழியர்களிடம் ஒருமையில் பேசும் தூய்மை அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் வலியுறுத்தினர்.
தூய்மைப் பணியாளர்களிடம் உரையாடிய பின்னர் வெங்கடேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாடு முழுவதும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆணையம் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விரைவில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை, அரசு பணியாளர்களாக நியமிக்க அரசுடன் கலந்தாலோசிக்கப்படும்.
தூய்மைப் பணியாளர்களை சாதி ரீதியாகவோ அல்லது பாலியல் துன்புறுத்தல், ஒருமையில் பேசுவது போன்ற செயல்கள் மூலமாக துன்புறுத்துவது தெரிய வந்தால், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விரைவில் சம்பளம் உயர்த்தி, அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வழிவகை செய்யப்படும்.
செயல்பாடற்று இருக்கும் கண்காணிப்புக் குழுக்கள் மீது விரைவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். வீடற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு, வீடு வழங்க ஏற்பாடு செய்து தரப்படும். தூய்மைப் பணியாளர்களின் நலன் காத்திட வைப்பு நிதி அளிக்கப்படும். தூய்மைப் பணியாளர்களுக்கு ஏதேனும் பாதிப்பு நடந்தால் 4420 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
மேலும் சுயதொழில் தொடங்க தாட்கோ மூலமாக கடன் உதவி வழங்க ஏற்பாடு செய்யப்படும். விரைவில் தூய்மைப் பணியாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை 25 லட்ச ரூபாயாக உயர்த்த வழிவகை செய்யப்படும். மாவட்ட ஆட்சித் தலைவரின் நேரடி விசாரணையின் மூலம் மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். விரைவில் மாநில அளவில் தூய்மைப் பணியாளர்களுக்கான ஆணையம் உருவாக்க பரிந்துரைக்கப்படும்” என்றார்.
ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அமர்குஷவாஹா, மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன், நகராட்சி தூய்மைப் பணியாளர் ஆணையர், தூய்மைப் பணியாளர் அலுவலர்கள், அரசு ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும் ஆம்பூர் அடுத்த மொதகப்பள்ளியில் இயங்கி வரும் தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த, புத்தூர் பகுதியினைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயிரிழந்தார். அதே பகுதியினைச் சேர்ந்த ரத்தினம் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோதகப்பள்ளியைச் சேர்ந்த பிரசாத், சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து நேரில் விசாரித்த மாவட்ட ஆட்சியர் அமர்குஷவாஹா, பாதிக்கப்பட்ட ஐந்து குடும்பத்தினருக்கு 12 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையை, தலா 2.40 லட்ச ரூபாய் வீதமாக பிரித்து காசோலையாக வழங்கினார்.
இதையும் படிங்க : சென்னை நாகராட்சியில் மாதம்தோறும் ஒரு வார காலத்திற்கு தீவிர தூய்மைப்பணி திட்டம்