திருப்பத்தூர்: ஏலகிரி மலைப்பகுதியில் இந்து முன்னணி அமைப்பின் மாநில நிர்வாகிகள் குழு கூட்டம் இன்று (மே 29) நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "நமது பிரதமர் மோடி வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் தமிழக ஆதீனங்களிடமிருந்து பெற்றது தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது. அந்த விழாவில் தமிழ்நாட்டின் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த மாணவி ஒருவர் தேவாரம் பாடியிருக்கிறார். இந்த செயலுக்காக பிரதமரை இந்து முன்னணி மனதாரப் பாராட்டுகிறது.
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக பல கோயில்களில் சிலை உடைப்பு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சரியாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலில் கருவறையில் புகுந்து சிலைகளை சேதப்படுத்தியுள்ளனர். இதுபோல பல்வேறு கோயில்களில் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது.
இதையும் படிங்க: பழனி முருகன் கோயிலில் ஆகம விதிப்படியே மண்டல பூஜை - அறநிலையத் துறை
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைப்பகுதியில் இந்து மதம் சார்ந்த பூர்வகுடி மக்களை கிறிஸ்தவர்கள் மதமாற்றம் செய்ய முயற்சித்து வருகின்றனர். இதில் அரசு தலையிட்டு முறையாக விசாரணை நடத்தி இந்து மக்களை காக்க வேண்டும். பூர்வகுடி இந்து மக்களுக்கு இந்து மதம் சார்ந்த பள்ளிகள் வேண்டும். கிறிஸ்தவ பள்ளிகளில் படிக்கும் இந்து மாணவர்களை கிறிஸ்துவ விழாக்கள், ஊர்வலம் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிக்கு கட்டாயப்படுத்தி கலந்து கொள்ள செய்வது சட்டப்படி குற்றம், எனவே இந்து குழந்தைகளை அதிலிருந்து பாதுகாக்க வேண்டும்.
திருப்பத்தூர் மாவட்டம் கோட்டை பிரமேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தையும், கோயில் மதில் சுவரையும் ஆக்கிரமித்து அராஜகம் செய்யக் கூடிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அரசு கடவுள் நம்பிக்கை இல்லாத அரசு. அதன் காரணமாக அறநிலையத்துறையில் உள்ள அதிகாரிகளும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக உள்ளனர்.
இதையும் படிங்க: பழனி முருகன் கோயிலில் போகர் ஜெயந்தி விழாவுக்கு தடை - பக்தர்கள் அதிர்ச்சி!
பழனியில் கோயில் கும்பாபிஷேகம் ஆகம விதிகளை மீறி நடந்தது. அதேபோல் பழனியில் போகர் ஜெயந்தி விழா பல நூற்றாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஆண்டு பழனியில் போகர் ஜெயந்திக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். கடவுள் நம்பிக்கை இல்லாத இந்த அரசாங்கம் கோயில்களுக்கு தொடர்ந்து இது போன்ற இடையூறுகளை செய்து வருகிறது. நிறைய இடங்களில் கோயில்களை இடிக்கவும் முயற்சி செய்கிறார்கள். குறிப்பாக சிறிய சிறிய கோயில்களை கைப்பற்ற நினைக்கிறார்கள். பல பழமையான கோயில்களில் வருமானத்தை மட்டும் பார்க்கிறார்கள், ஆனால் அவற்றை பராமரிப்பதில்லை" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பண்பாடு மிக்க பாரத பிரதமரை நாம் பெற்று உள்ளோம்: தருமபுர ஆதீனம் புகழாரம்