திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாப்பா நேரி பகுதியைச் சேர்ந்தவர் மின்னல் அம்மா. இவர் உடல் நலிவுற்ற நிலையில் நேற்று (செப்.,12) காலமானார். இவரது மகன் முருகேசன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வாணியம்பாடி கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தனது தாய் உயிரிழந்தது குறித்து தகவலறிந்த முருகேசன், கடைசியாக அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஆசைப்பட்டார். இதற்காக, அரசு அலுவலர்களிடம் மன்றாடினார். இந்த தகவலறிந்த வருவாய் துறையினர் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் முருகேசனுக்கு பாதுகாப்பு கவச உடை அணிவித்து அவரது தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து, நேற்றிரவு அவரது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த அழைத்துச் செல்லப்பட்டார். தனது தாயின் உடலை பார்த்து கதறி அழுத முருகேசன் இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று வருவாய்த் துறையினர் உதவிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க:தாய்க்கு கரோனா: குழந்தையை காணொலி அழைப்பில் பார்த்த தாய் - நெகிழ்ச்சி சம்பவம்!