திருப்பத்தூர்: நாட்டறம்பள்ளி அடுத்த கல்லியூர் தரகப்பனூர் வட்டம் பகுதியில் நேற்று இரவு நாட்டறம்பள்ளி போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் இனோவா காரும் அதற்கு முன்பு, பாதுகாப்புக்காக இருசக்கர வாகனத்தில் அடையாளம்தெரியாத நபர்களும் வந்து கொண்டிருந்தனர்.
சந்தேகம் அடைந்த போலீசார் இருசக்கர வாகனத்தை வழிமறிக்கும் பொழுது திடீரென இருசக்கர ஓட்டுநர் வண்டியை வளைத்து, தப்பி ஓடியுள்ளார். பின்னால் வந்த இனோவா காரை வழிமறிக்க முற்படும்பொழுது இனோவா கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள மரத்தில் மோதியுள்ளார்.
இதில் ஓட்டுநர் காரை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இனோவா காரை பரிசோதனை செய்ததில் அதில் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 8 செம்மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் நாட்டறம்பள்ளி உதவி காவல் ஆய்வாளர் முனிரத்தினம் வண்டியைக் கைப்பற்றி நாட்டறம்பள்ளி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தார்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை வாணியம்பாடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் தப்பி ஓடிய ஓட்டுநர், எங்கிருந்து செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசு விழாவில் மத சடங்குகளா? - விரட்டியடித்த தர்மபுரி எம்பி!